தமிழகம்

வடபழனி தீ விபத்து: தூக்கத்திலேயே நான்கு பேரும் இறந்தனர்

செய்திப்பிரிவு

தீ விபத்து ஏற்பட்டபோது அறை யில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.

சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், படுகாய மடைந்த 8 பேருக்கு தீக்காயங்கள் சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தகவல் அறிந்த அவர் களின் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து காயமடைந்தவர் களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், பிரேதப் பரிசோதனை குறித்தும் கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பி.வசந் தாமணியிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் டீன் வசந்தாமணி கூறும்போது, “தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டதால் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். விபத்தின்போது புகைமூட்டம் ஏற்பட்டதால் மூச்சுத்திணறி அவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஐயப்பனுக்கு 54 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ள மார்டின், தங்கம், ஆண்டனி ஆகியோருக்கு 21 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.

பாட்டி வீட்டுக்கு வந்த குழந்தைகள்

உயிரிழந்த குழந்தை சந்தியாவின் தாய் லதா கூறும்போது, “எனக்கு சந்தியா, ஷாலினி என்ற 2 மகள்கள். கோடை விடுமுறை என்பதால் எனது மூத்த மகள் சந்தியா எனது அம்மா செல்வி வீட்டில் இருந்தாள்.

நேற்று அதிகாலை அவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து எனக்கு 7 மணிக்குத்தான் தகவல் தெரிந்தது. ஒரே விபத்தில் எனது பாட்டி, தாய், மகள், தங்கையின் மகன் என குடும்பத்தில் பாதியை இழந்து தவிக்கிறேன்” என்றார்.

ஒரே மகனை இழந்த தாய்

உயிரிழந்த குழந்தை சஞ்சய்யின் தாய் துர்காதேவி கூறும்போது, “எனது ஒரே மகன் சஞ்சய். எப்போதும் துருதுருவென இருப்பான். அவனை எனது தாய் செல்விதான் வளர்த்தார். அவர் மீது எனது மகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான்.

அவனை எனது தாய் வீட்டில் கடைசியாக விட்டுவிட்டு வரும்போது “அம்மா நீ போகாதே என்னோடு இரு” என்றான். இப்போது அவன் மட்டும் தனியே போய்விட்டான்” என்று கூறி அழுதார்.

தீவிபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாலை 5 மணி அளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT