கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தீ பிடித்தது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக்கூட அறையில் இருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் புகை வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த மாணவர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜ்பவன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ அதிகமாக எரிந்ததால் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இயற்பியல் ஆய்வுக்கூட அறையும் அதன் பக்கத்தில் இருந்த கணினி அறையும் தீயில் சேதம் அடைந்தன. ஆய்வுக்கூடத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து விட்டன.
கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக தீப் பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாலை நேரம் என்பதால் அறையில் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.