தமிழகம்

இந்தியக் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் சென்னை’மெரினா வருகை: பொதுமக்கள் உற்சாகமாக பார்வையிட்டனர்

செய்திப்பிரிவு

இந்தியக் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ என்ற போர்க் கப்பல் 3 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தது. இக்கப்பலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்.

இந்தியக் கடற்படையில் ‘ஐஎன்எஸ் சென்னை’ என்ற நவீன ரக போர்க் கப்பல் கடந்த 2016 நவம்பர் 21-ம் தேதி சேர்க்கப்பட்டது. ‘15-ஏ’ என்ற திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 3-வது நவீன ரக போர்க் கப்பலான இது, மும்பையில் உள்ள மேற்கு பிராந்திய கடற்படை அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. 7 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இக்கப்பலில் தரையில் இருந்து மற்றொரு தரைப் பகுதியில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை, தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை, நவீன ரக ரேடார் கருவிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட் லாஞ்சர்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் அணுசக்தி, உயிரியியல் மற்றும் ரசாயன தாக்குதல்களை முறியடிக்கும் கருவிகள் உள்ளிட்டவை உள்ளன.

முதல்வர் பார்வையிடுகிறார்

கடந்த 10-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இக்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. ‘ஐஎன்எஸ் சென்னை கப்பலுக்கு பாரம் பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளி மாணவர்களும் தேசி யக் கொடியை கைகளில் ஏந்தி வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகம், புதுவைக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியக் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்ஸ் சென்னை’ போர்க் கப்பல் முதன்முறை யாக சென்னை வந்துள்ளது. 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும் இக்கப்பலில் 40 அதிகாரிகள் 330 மாலுமி கள் உள்ளனர். இக்கப்பலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை (நாளை) பார்வையிடு கிறார்’ என்றார்.

கப்பலின் கேப்டன் சி.ஆர்.பிரவீன் நாயர் கூறும்போது, ‘15-ஏ’ என்ற திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 3-வது நவீன ரக போர்க் கப்பல் இது. போர்க் கப்பல்களுக்கு பொதுவாக முக்கியமான நகரங்கள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றின் பெயர்களை சூட்டுவது வழக்கம். அந்த வரிசையில் இக்கப்பலுக்கு சென்னை நகரத்தின் பெயர் சூட்டப்பட்டது. இப்பெயரை குடியரசுத் தலைவர் சூட்டினார். சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் கப்பல் சார்பில் இரண்டு டிரக் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன’ என்றார்.

பொதுமக்கள் பார்வைக்காக..

முன்னதாக, ‘ஐஎன்ஸ் சென்னை’ போர்க் கப்பல் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்ப லின் இலச்சினையாக (லோகோ) மஞ்சம் பட்டி ஜல்லிக்கட்டு காளையின் உருவம் இடம் பெற்றுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், மஞ்சம்பட்டியில்ஆண்டுதோறும் நடை பெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு காளைகள் இடம் பெற்று வருகின்றன.இக்காளைகள் உடல் வலிமைக்கும், வீரத்துக்கும் புகழ் பெற்றவை. அத்துடன், எதிரிகளை தாக்குவதிலும் சிறந்து விளங்குபவை.

ஜல்லிக்கட்டு காளை

அதுபோல், ‘ஐஎன்ஸ் சென்னை’ போர்க் கப்பலிலும் நவீன ரக ஆயுதங்கள் இடம் பெற்றிருப்பதும், எதிரிகளை தாக்கி அழிப்பதில் வல்லமை பெற்று திகழ்வதால் இக்கப்பலின் சின்னமாக மஞ்சப்பட்டி ஜல்லிக் கட்டு காளையின் உருவம் இடம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT