வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வை யாளர் கட்டணம் 9 ஆண்டு களுக்கு பிறகு தற்போது உயர்த்தப் பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. பூங்காவை சுற்றிப் பார்க்க வரும் பெரியவர்கள் ரூ.50, சிறியவர்கள் (5 வயது முதல் 12 வயது வரை) ரூ.20, புகைப்படக்கருவி (கேமரா, செல்போன், ஐ பேட், டேப்,) ரூ.25, வீடியோ கேமரா கட்டணம் ரூ.150, பூங்காவை பேட்டரி வாகனம் மூலம் சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
சிங்க உலாவிடம் வாகன கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் நுழைவு சீட்டு வாங்காதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
வண்டலூர் பூங்கா 1976-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. 1985-ம் ஆண்டு முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பெரியவர்களுக்கு இரண்டு ரூபாய், சிறியவர்களுக்கு ரூ.1 வசூலிக்கப்பட்டது. பிறகு, 1990-ம் ஆண்டு பெரியர்களுக்கு ரூ. 5, சிறியவர்களுக்கு ரூ. 2 எனவும் அதனை தொடர்ந்து 2001-ம் ஆண்டு பெரியவர்களுக்கு ரூ. 15, சிறியவர்களுக்கு ரூ. 10 ஆக இருந்தது. மீண்டும் 2008-ம் ஆண்டு பெரியவர்களுக்கு மட்டும் ரூ. 30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பார்வையாளர்கள் கட்டணமும், இதர கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வார்தா புயலின் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தன. பசுமை நிறைந்து காணப்பட்ட பூங்கா இன்று வெட்டவெளியாக காட்சியளிக்கிறது. பூங்காவை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதி போதுமானதாக இல்லை. மேலும் பூங்கா மறு சீரமைப்புக்கு ரூ.24 கோடி தேவை என மத்திய குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை. பூங்காவை பழைய நிலைக்கு கொண்டுவர நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படு கிறது. விலங்குகளுக்கு உணவு, பராமரிப்பு, பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதி உள்ளிட்டவை களுக்கு அதிக நிதி தேவையாக உள்ளது. நிதி தேவை என்பதால் கட்டணம் உயர்த்த வேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டது என்றார்.