சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் இறந்த 4 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், சிண்டகுபா அருகில் உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில், 25 வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நல்லூரைச் சேர்ந்த மு.பத்மநாபன், நீடாமங்கலம் வட்டம் காமராஜர் காலனியைச் சேர்ந்த நா.செந்தில்குமார், சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், நல்லூரைச் சேர்ந்த ந.திருமுருகன், மதுரை, பேரையூர் வட்டம் முத்துநாகலாபுரத்தைச் சேர்ந்த பி.அழகுபாண்டி ஆவர்.
திருவாரூர், சேலம் மாவட்டத் தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் விமானம் மூலம் அதிகாரிகள் தலைமையில் திருச்சி கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சாலை வழியாக சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மதுரை யைச் சேர்ந்தவர் உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, பேரையூர் கொண்டுசெல்லப்படுகிறது.
முதல்வர் இரங்கல்
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தமிழக துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவர்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.