இயற்கை வழி விவசாயமும், சூழலியல் குறித்த அக்கறையும் பொதுமக்களிடையே பெருகி வரும் நிலையில், சத்யபாமா பல்கலைக்கழகம் புது முயற்சியாக தங்கள் வளாக மாடிகளிலேயே மாடித்தோட்டங்களை அமைத்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய உயிர்த்தொழில்நுட்பப் பிரிவு பேராசிரியர் ஸ்வர்ணலதா,
"இயற்கை மானுடர்களை பல்வேறு வழிகளில் பாதுகாத்து வருகிறது. அதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலைக் காக்கவும் நாங்கள் புதுமுயற்சியை எடுத்துள்ளோம்.
பெருகி வரும் தொழில்நுட்பங்களுக்கிடையே சூழலை சமப்படுத்தும் நோக்கில், மாடித்தோட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். கடந்த மார்ச் 8-ம் நாள் பெண்கள் தினத்தன்று இந்த மாடித்தோட்டம் நிறுவப்பட்டுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2016 அன்று எங்கள் பல்கலைக்கழகக் கட்டிடங்களின் ஒவ்வொரு மாடியிலும் அதை முழுமையாக விரிவுபடுத்தி இருக்கிறோம்.
சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர்கள் மேரி ஜான்சன் மற்றும் மரியசீனா ஜான்சன் ஆகிய இருவரும் விதைகளை நட்டு, தண்ணீர் தெளித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து 7 மாடிகளில் மொத்தம் 1000 சதுர அடி இடத்தில் நச்சு உரங்கள் இல்லாமல், இயற்கை வழியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கன்றுகளை முழுமையாக நட உதவிய மாணவர்கள், அவற்றைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துன்றனர். பசுமை காக்கும் இப்பணியை மற்ற நிறுவனங்களும் மேற்கொண்டால் மகிழ்ச்சி" என்கிறார்.