காதலை ஏற்றுக் கொள்ளாமல் திருமணம் செய்ய மறுத்ததால், மாணவியை கொலை செய்ததாக கொலையாளி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடியைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் தாரணி (19). சிவகங்கை மாவட்டம் சறுகனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சேதுராமன் மகன் செல்வகுமார் (29). இவர்கள் இருவரும் உறவினர்கள். செல்வக்குமார் ஒருதலைப் பட்சமாக தாரணியைக் காதலித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தாரணியை திருமணம் செய்து வைக்கும்படி, உறவினர்கள் மூலம் கேட்டுள்ளார். அதற்கு தாரணி வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் செல்வகுமார் நேற்று முன்தினம் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் தாரணியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு தனியாக இருந்த தாரணியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது தாரணி கூச்சலிடவும், தான் வைத்திருந்த அரிவாளால் தாரணியின் கழுத்தில் வெட்டி கொலை செய்தார். அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து செல்வகுமாரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருவாடானை போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தெரிவித்ததாவது: தாரணி முறைப்பெண் என்பதால் காதலித்தேன். பலமுறை எனது காதலை தெரிவித்தும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை அவமானப்படுத்துவதுபோல இருந்ததால் வெறுப்பு ஏற்பட்டது. கடைசியாக நேற்று முன்தினம் எனது காதலைத் தெரிவித்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதற்காக சென்றேன். அவர் சத்தம் போட்டதால் கோபமடைந்த நான் அரிவாளால் வெட்டியதில் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.