புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடை யார் கோயில் சித்திரைத் தேரோட் டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘தியாகேசா, ஆரூரா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனும் பெருவுடையார் கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவும், இதன் 15-ம் நாளன்று நடைபெறும் தேரோட்ட மும் சிறப்பானது. காலப்போக்கில் தேர்கள் சிதிலமடைந்ததாலும், பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததாலும் 100 ஆண்டு களாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், தஞ்சை மக் களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, 2015 முதல் தேரோட்டம் நடைபெற்று வருகி றது. தொடர்ந்து, 3-ம் ஆண்டாக பெருவுடையார் கோயில் சித் திரைப் பெருவிழாவின் 15-ம் நாளான நேற்று தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5.15 மணியளவில் கோயில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்களுடன் தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி- தெய்வானை- சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங் கார சப்பரத்தில் புறப்பட்டு, கோயில் வெளியே வந்து சோழன் சிலை, சிவகங்கைப் பூங்கா வழியாக தேர்மண்டபம் வந்தடைந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருள, காலை 6.15 மணியளவில் தேரோட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தொடங்கிவைத்தார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அலங்கரிக்கப்பட்ட யானை நடந்து வர, விநாயகர், சுப்பிர மணியர் ரதங்கள் முன்னே செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய தேர் அசைந்தாடி சென்றது. நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் ரதங்கள் தேரை பின் தொடர்ந்தன. நான்கு ராஜ வீதிகளையும் வலம் வந்த பின்னர், நண்பகல் 12.05 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது.
நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த நிலையிலும், தேரோட்டத்தில் பங்கேற்ற 6 பெண்களிடம் 20 பவுன் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஹைட்ராலிக் பிரேக்
கடந்த 2 ஆண்டுகளாக தேரை நிறுத்த சறுக்குக் கட்டைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பெல் நிறுவனம் உதவியுடன் தற்போது ரூ.3.75 லட்சம் செலவில், தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால், நேற்று தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது. தெற்கு ராஜவீதிக்கு வந்த தேர், ராகு காலம் என்பதால், அங்கு 10.30 மணி முதல் 11.50 மணி வரை நிறுத்தப்பட்டது.