தமிழ் மரபில் தோன்றிய தற்காப்புக் கலைகளில் ஒன்று வர்மக்கலை . உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளில் தாக்குவது அல்லது சிகிச்சை அளிப்பதே வர்மக் கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, பின்னாளில் தற்காப்புக் கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது இது.
உடல் சீராக இயங்குவதற்காக, உடலின் 126 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மப் புள்ளிகள் எனப்படும். நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகளை உயிர்நிலைகளின் ஓட்டம் என்று கூறுவர். கழுத்துக்கு மேல், கழுத்திலிருந்து தொப்புள் வரை, தொப்புள் முதல் மூலாதாரம் வரை, இரு கைகள், இரு கால்கள் என மொத்தம் 126 வர்ம முனைகள் உள்ளன. இவற்றை வர்மக்கலையின் மூலமாக தாக்குதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகளைக் கற்பித்து வருகிறார், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த வர்ம ஆசான் டிராகன் டி.ஜெய்ராஜ்(60). அவரை சந்தித்தோம்.
“வர்மம் என்பது உயிர் தங்கியுள்ள இடங்களைக் குறிக்கும். உயிர்நிலைகள் மனிதனுடைய ஒவ்வொரு பாகத்திலும் இணைந்துள்ளன. மொத்தமுள்ள 126 வர்மங்களில் படு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம், அடங்கல் வர்மம், நோக்கு வர்மம் போன்றவை முக்கியமானவை. மனிதர்களை தொடாமல் வீழ்த்தும் ‘மெய் தீண்டா கலை’ வர்மத்தின் உச்சகட்டமாகும்.
படு, தொடு, தட்டு, அடங்கல் ஆகிய நால்வகை வர்மங்களில் படு வர்மமானது மனித உடலின் உள்புறத்தில், சற்று ஆழமாக அமைந்துள்ளது. ‘படு’ என்பது படுவேகத்தைக் குறிப்பதாகும். இதில், மனிதர் மீது ஒரு மாத்திரை அளவில், அதாவது ஒரு செ.மீ. அளவுக்குத் தாக்கினால்கூட, தாக்கப்பட்டவரின் வர்மப் புள்ளியானது, மயக்கம் ஏற்படுதல், சுயநினைவு இழத்தல், கை கால் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
‘தொடு வர்மம்’ என்பது உடலில் 96 இடங்களில் உள்ளது. இதில், எதிராளி உடலில் உள்ள வர்மப்புள்ளியை அழுத்துவதன் மூலம், அவரை வீழ்த்த முடியும். சிறு செயலழிப்பு இருக்குமே தவிர, பெரிய பாதிப்புகள் இருக்காது. அதேபோல, விபத்து போன்றவற்றால் வர்மப் புள்ளிகளில் அடிபட்டு, பாதிக்கப்பட்டவருக்கு இந்த வர்மத்தின் மூலம் சிகிச்சை அளித்து, குணப்படுத்த முடியும். தொடுவர்மத்தின் அடுத்த நிலை தட்டு வர்மம். இது, உள்ளங்கை தட்டு, முன்கால்படம், பக்கவாட்டு கால்படம், குதிக்கால் தட்டு, புறங்கால் தட்டு ஆகிய முறைகளில் தாக்குதல் நிகழ்த்துவதாகும். இந்த முறையில் தாக்கும்போது, வர்மப் புள்ளிகளில் அதிர்வை ஏற்படுத்தி, உடலில் பரவச் செய்யமுடியும்.
‘அடங்கல் வர்மம்’ என்பது, உடலில் உள்ள 14 உயிர்காக்கும் வர்மப் புள்ளிகளாகும். விபத்தில் சிக்கியவருக்கு தொடுவர்ம நிலையில் சிகிச்சை அளித்தும் பயனில்லை எனில்,
அவரது நாக்கின் கீழ் உள்ள ஜவ்வு போன்ற பகுதியில் ஆட்காட்டி விரலை வைத்து அழுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்டவை எழச் செய்ய முடியும். இது ‘நாக்கு திரட்சி வர்மம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற் பட்டவர்கள் நம்மைத் தாக்க வரும்போது, நோக்கு வர்மம் மூலம் அவர்களது எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியும். நோக்குவர்மம் பாய்ச்சப் பட்டவர்களுக்கு சில விநாடிகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. வந்த நோக்கத்தையும் மறந்துவிடுவர். இதேபோல, வர்ம சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் மூச்சுக்காற்று, உடல் அசைவுகள், மூச்சு வாங்கும் நிலை ஆகியவற்றைக் கொண்டு, எந்த வர்மப் புள்ளியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணித்துவிட முடியும். தியானம் மூலமாக மனதை ஒருங்கிணைத்து, ஆன்மபலத்தின் மூலமாக சிகிச்சை அளிப்பதற்கு வர்மம் உதவுகிறது.
வர்மக்கலையின் உச்சகட்டமான ‘மெய் தீண்டா கலை’, பிறர் உடலைத் தொடாமலேயே, நமது உள் ஆற்றல் மூலமாக எதிரியை நிலைகுலையச் செய்வதாகும். மிருகங்களைக்கூட நம் பாதையிலிருந்து விலகச் செய்ய முடியும். நோயாளிகளின் உடலைத் தொடாமலேயே சிகிச்சை அளிக்க இக்கலை உதவுகிறது.
குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அதன்மூலம் உடலில் உள்ள 7 சக்கரங்களையும் இயங்கவைத்து, அதில் உற்பத்தியாகும் ஆன்ம சக்தியை, நம் உடலாற்றல் மூலமாக எதிராளி மீது உட்செலுத்துவதே இதன் அடிப்படையாகும்.
தற்காப்புக்கலை, மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான கலை அல்ல. நம்மை தற்காத்துக் கொள்வதுடன், பிறரையும் பாதுகாப்பதாகும்.ஒருவர் ஆயுதத்துடன் தாக்கவந்தால், பாதுகாப்புக்காக அவரது உடலில் உள்ள தொடுவர்மப் புள்ளிகளை தாக்கி, செயலிழக்கச் செய்யலாம். பின்னர், எதிராளியை மன்னித்து, வர்ம சிகிச்சை மூலம் குணமடையச் செய்வதே வர்ம ஆசானின் கடமையாகும். அதேசமயம், நல்லவர்கள் தாக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசானால் வர்ம சிகிச்சை அளித்து, பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.
எச்சரிக்கை!
புத்தகங்களைப் படித்தோ, இணையதளத்தில் பார்த்தோ வர்மக்கலையை கற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. முறையான பயிற்சியால் மட்டுமே முழுமையாக கற்க முடியும். வர்மம் என்பது தற்காப்புக்கலை மட்டுமின்றி, சிகிச்சையையும் உள்ளடக்கியதாகும். பாரம்பரியமான இந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்க வேண்டும்” என்றார் உறுதியுடன் டி.ஜெயராஜ்.