தேனியில், நாவல் பழங்களை சித்த மருத்துவத்திற்காக விளைநிலங்களில் இருந்து நேரடியாக அதிகளவில் கொள்முதல் செய்வதால் அதன் சந்தை வரத்து குறைந்துள்ளது.
மருத்துவகுணம் அதிகம் உள்ள நாவல்பழங்களை சித்த மருத்துவத்திற்காக விளைநிலங்களில் இருந்து நேரடியாக அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதன் விலை அதிகரித்துள்ளதுடன் சந்தை வரத்தும் குறைவாகவே இருக்கிறது.
நாவல் மரங்கள் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள், சின்னமனூர், ஆண்டிபட்டி, மதுரை, நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகம் உள்ளன.
மருத்துவ குணம் கொண்ட நாவல்பழங்களின் சீசன் ஆண்டிற்கு இரண்டு முறை இருந்தாலும் வைகாசியில் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கும். வரும் ஜூலை, ஆகஸ்ட் வரை இதன் மகசூல் தொடரும்.
நாவல் மரங்கள் வணிகநோக்கில் இல்லாமல் பெரும்பாலும் தோட்டங்களிலும், வீடுகளிலும் அதிளவில் வளர்ந்துள்ளன. இனிப்பும், துவர்ப்பும் கலந்த இப்பழங்களில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்தது என்பதால் பலரும் இதனை விரும்பி உண்கின்றனர்.
தற்போது விற்பனைச்சந்தையில் கிலோ ரூ.240-க்குவிற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இப்பழங்களைப் பறித்து சேகரிக்காமல், விழுவதை எடுத்து வந்து விற்பனை செய்வதால் குறைவான அளவிற்கே ஒவ்வொரு வியாபாரியும் விற்பனை செய்து வருகின்றனர்.
பழங்கள் சிதையாமலும், மண் ஒட்டாமலும் இருப்பதற்காக மரத்தின்கீழ் இடைவெளியின்றி துணிபரப்பி விழும் பழங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காக்காய், குருவி போன்றவை கொத்தி பழங்களை சேதப்படுத்தும், காற்றுக்கும் அதிகம் விழுந்து விடும். எனவே மரத்தின் கீழ் துணி பரப்பி விழுவதை எடுத்துக் கொண்டே இருப்போம். கவனிக்காமல்விட்டுவிட்டால் கோழி உள்ளிட்டவை கொத்திக் கொண்டு போய் விடும். எனவே ஒருஆள் இதனை சேகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றனர்.
நீரிழிவு, ரத்தசோகை உள்ளிட்டவற்றிற்கு உயர்பலன் தரும் என்பதால் சித்த மருத்துவத்தில் இதன் கொட்டைக்கு தனிச்சிறப்பு உண்டு. எனவே சித்த மருத்துவ நிலையங்கள் இதனை விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றன.
இதனால் விற்பனைச் சந்தைக்கு பழங்கள் வருவதும் குறைந்துள்ளதுடன், அதன்விலையும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து சித்தமருத்துவர் சிவமுருகேசன் கூறுகையில், வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன. பழம் மட்டுமல்லாது இலை, மரப்பட்டை, விதை என்று அனைத்துமே மருத்துவம் உடையது. பேதியை கட்டுப்படுத்தும், பித்தத்தை தணிக்கும், இரத்தசோகை, நீரிழிவு நோயை தடுக்கும்.
விதையை பவுடராக்கி சர்க்கரைநோயாளிகள் தினமும் உண்டு வந்தால் சிறுநீர்ப்போக்கு குறையும். இதற்காகப் பழமை வாய்ந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் சித்தமருத்துவர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர் என்றார்.