சென்னை இளைஞருக்கு கூகுள் நிறுவனத்தில் மென் பொறியாளர் வேலை கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் ஊதியத்தில் இவர் வேலையில் சேர உள்ளார்.
சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞர் கே.பி.ஷாம். இவர் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 5 ஆண்டுகள் மென்பொறியாளர் படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் ஷாம் மென்பொறியாளர் பணிக்கான தேர்வில் கலந்துகொண்டார்.
எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அவர், கூகுள் நடத்திய நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து ஷாமுக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்தது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஷாம், ''சின்ன வயதில் இருந்து எனக்கு கோடிங்கில் (Coding) ஆர்வம் அதிகம். கல்லூரியில் படிக்கும்போது கோடிங் தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்வேன். இரண்டு சீனியர்களுடன் சேர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம்.
ஒரு சீனியர் கடந்த ஆண்டு கூகுளில் தேர்வானார். அவரின் வழிகாட்டுதலால் கடந்த ஜனவரி மாதம் கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்தேன். தேர்வுகளில் வெற்றியும் பெற்றேன். பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்தது கூகுள் போன்ற சர்வதேசத் தரம் கொண்ட அலுவலகத்தில் வேலைக்குச் சேர உதவியது'' என்றார் ஷாம்.