அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் மறைந்த எம்எல்ஏ கு.இராதாமணி இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட நேரம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற்றது. அதன் பிறகு, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை.
ஜூன் 28-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31 வரை கூட்டத் தொடர் நடைபெறும் என ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தற்போது அறிவித்துள்ளார்.
மொத்தத்தில் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். இன்று நடைபெறும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவையில் எப்படி செயல்படுவது, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை, நீட் தேர்வு, விவசாயிகள் நிலை, 7 பேர் விடுதலை, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளும், மானியக்கோரிக்கைகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.