தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு இருந்த வறட்சி காலத்தில் வழங்கப்பட்டதைவிட தற்போது அதிகளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சென்னையில் கூடுதல் வால்வுகள் பொறுத்தப்பட்ட தண்ணீர் லாரிகள் சேவையை அமைச்சர் வேலுமணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அப்போது அவர், "சென்னையில் தினமும் 1080 லாரிகள் 11,360 நடையாக தண்ணீர் விநியோகம் செய்கின்றன. 11,360 நடையாக தினமும் விநியோகம். நாளொன்றுக்கு 520 எம்.எல்.டி தண்ணீர் வழங்கி வருகிறோம்.
இதுதவிர அண்டை மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் லாரிகளைப் பெற்று இயக்கவிருக்கிறோம். இதனால், ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
முதல்வர் பழனிசாமி சொன்னதுபோல் இன்னும் 3 வாரங்களில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்குக் கொண்டுவரப்படும்.
இதுதவிர நெம்மேலி திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்திருக்கிறார். பேரூரில் 400 எம்.எல்.டி உற்பத்தி செய்யக்கூடிய கடல்நீர் சுத்திகரிப்பு மையமும் விரைவில் தொடங்கிவைக்கப்படும்.
மழைநீரை சேகரிப்பது மக்கள் மத்தியில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. விரைவில் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கிறோம். மழை பெய்யும்போது நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
இப்போது லாரிகளில் கூடுதல் வால்வுகள் பொறுத்தியுள்ளோம். 3 வால்வுகள் மட்டுமே இருந்த நிலையில் ஐந்து வால்வுகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் 1.45 மணி நேரத்தில் ஒரு லாரி தண்ணீரை விநியோகித்துவிட முடியும். இதன்மூலம் நேரம் மிச்சம் செய்யப்பட்டு கூடுதல் நடை தண்ணீர் விநியோகிக்க முடியும். ஃபில்லிங் ஸ்டேஷனிலும் கூடுதல் வால்வுகள் பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.