தமிழகம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக இருப்பதால் பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி, கடந்த 24-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ராஜாராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

ஆனால், மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

மனு விவரம்:

தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான தீர்ப்பு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றம் அல்லது 37-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான ஜெயலலிதா, தமிழக முதல்வராக உள்ளார். அவரது உயிருக்கு ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. இதனால், அவருக்கு "இசட் பிளஸ்' பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவிரி நதி நீர் பிரச்னையில் அவரது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கர்நாடக மாநில மக்கள் மத்தியில் அதிருப்தியும், வெறுப்பும் நிலவுகிறது.

இந்நிலையில், தீர்ப்பு அளிக்கப்படும் நாளான செப்டம்பர் 27-ஆம் தேதி பெங்களூரு நீதிமன்ற வளாகத்திற்கு வரும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுகிறது. பரபரப்பான அக்ரஹார சிறை வளாகங்களில் நீதிமன்ற வளாகத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் கிடையாது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து பெரும்பான்மை அதிமுகவினரும் தீர்ப்பு வெளியாகும் நாளில் பெங்களூருவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களாலும் அச்சுறுத்தல் உள்ளது.

எனவே, முதல்வர் ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிர் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடகம் தவிர்த்த வேறு பிற மாநிலங்களில் அளிக்க உத்தரவிட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT