உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி 530 உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஊரகப் பகுதிகளில் 67.99 சதவீதமும், நகர்ப்புறங்களில் 63.57 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. தமிழகம் முழுவதும் 307 வாக்கு எண்ணும் மையங்களில் 22-ம் தேதி (நாளை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள், அவர்களின் அதிகாரப்பூர்வ முகவர்கள் மட்டுமே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கையில், எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, பொது அமைதிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடத்தை விதிகளை தவறாது கடைபிடிக்கவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.