ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வைத்து, தமிழக - கர்நாடக மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு வழங்கப் பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிதாக கருத்துகூற விரும்பவில்லை.
தற்போது வழங்கப்பட்டுள்ள தண்டனை மூலம் ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வைத்து தமிழக - கர்நாடக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, அம்மாநில மக்களோ அல்ல.
தமிழகத்தில் 2 நாட்களாக வன்முறை, பொதுச் சொத்துக் களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகின்றன. போலீஸார் நடுநிலையோடு செயல்பட்டு, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூலிக்க வேண்டும். புதிதாக பொறுப்பு ஏற்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் வேலை, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதுதான்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு, புதுச்சேரியில் அடுத்த ஆண்டு மார்ச் 25 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. விலைவாசி உயர்வைக் கண்டித்து 6-ம் தேதி தேசிய அளவில் நடக்கவிருந்த மறியல் போராட்டம், 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.