தமிழகம்

ஆசிரியர் தின பெயர் மாற்றம் தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

செய்திப்பிரிவு

ஆசிரியர் தினத்தை 'குருஉத்சவ்' என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தேசிய ஒருமைப்பாடு வலுப்பெற இத்தகைய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி திரு இராதாகிருஷ்ணன் ஆவார். அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் திருநாளாக ஆசிரியர் தினம் 1962 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினம் அன்று பிரதமர் நரேந்திமோடி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்களிடம் இணையம் மூலம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்நிகழ்ச்சியை வடிவமைத்துள்ள மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஆசிரியர் தினத்தின் பெயரை 'குருஉத்சவ்' என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வளர்த்தால்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர் தினத்தை “குருஉத்சவ்” என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT