திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இலவச காது கேட்கும் கருவி வழங்குவதாக வரச் சொல்லி 3 மாற்றுத் திறன் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட செவித்திறன் பரிசோதகரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.
திருச்சி சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேசமுடியாத மாணவிகள் 3 பேர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் 3 பேரும் தங்களது செவித்திறன் பாதிப்பு பற்றிய சான்றைப் புதுப்பிக்கவும், அரசு இலவசமாக வழங்கும் காது கேட்கும் கருவியைப் பெறவும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அவரவர் பெற்றோருடன் வந்தனர்.
மாற்றுத் திறனாளிகள் 3 பேரையும் வியாழக்கிழமை வந்து காது கேட்கும் கருவி வாங்கிச் செல்லுமாறு செவித் திறன் பரிசோதகர் மற்றும் பேச்சு பயிற்சியாளரான செல்லம் என்பவர் கூறியுள்ளார். வியாழக் கிழமை காலை அலுவலகத்துக்கு வந்த அந்த 3 மாணவிகளையும் பிற்பகல் 3 மணிக்கு பரிசோதகர் செல்லம் தனித்தனியாக தனது அறைக்கு அழைத்து பரிசோதனை என்கிற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மாணவிகள் நடந்த சம்பவங் களை தங்களது பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரும் மாற்றுத் திறனா ளிகள் நலச் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை காலை திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் செய்தனர்.
விசாரணையில் செல்லம், தகாத முறையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து செல்லத்தைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.