ஐக்கிய நாடுகள் பொது அவையின் 69-ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அரச பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளும் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவில் 100 மணி நேரம் மட்டுமே தங்கியிருக்கும் பிரதமர் 50 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் அவரது பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை சந்திக்க பல நாடுகளின் தலைவர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகத் தலைவர்கள் பலரும் நமது பிரதமரை தேடி வந்து சந்திக்கும் அளவுக்கு இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அதேநேரத்தில் உலகின் மிகக் கொடிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி நேரம் ஒதுக்கியிருப்பது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சி கலந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதை நிரூபிப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் அடிப்படையிலும், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்றும் இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை அதிபர் இராஜபக்ச மறுத்துவிட்டார். இதுகுறித்தும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்து வருவது குறித்தும் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் கவலையும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
இன்னொருபுறம், இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வும், அதிகாரமும் அளிக்க இராஜபக்ச மறுத்து வருகிறார். கடந்த மே மாதம் 26 ஆம் தேதி தில்லி வந்த அவரிடம் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பதற்காக 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்தும்படி பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
அதன்பின் கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தில்லி வந்து பிரதமரை சந்தித்த போதும் இதே கோரிக்கையை மோடி வலியுறுத்தினார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்து விட்டது. அதுமட்டுமின்றி, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை இந்தியாவின் வலிமைக்கும், இறையாண்மைக்கும் சவால் விடுக்கும் நடவடிக்கைகள் ஆகும்.
இந்தியாவையும், ஐ.நா. அமைப்பையும் அவமதித்து வரும் ராஜபக்சவை ஐ.நா. கூட்டத்தின்போது இந்தியப் பிரதமர் சந்தித்து பேசுவது இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை வலுவிழக்கச் செய்யும் என்பதுடன், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கவும், இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் முதல் கட்டமாக, எந்தவித நிபந்தனையுமில்லாமல் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தவும் ஒப்புக்கொள்ளும் வரை இலங்கையுடன் உயர்மட்ட சந்திப்புகளை தவிர்க்க வேண்டும்; நியூயார்க்கில் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.