நாமக்கல் மாவட்டத்தில் இரு குழந்தைகளின் திருமணத்தை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.
திருச்செங்கோடு அருகே மல்ல சமுத்திரம் அருகே உள்ள கிராமத் தைச் சேர்ந்த 16 வயது மகளுக்கும், சேலம் மாவட்டம் ஓமலூர் நாலுகால்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நாலுகால்பாளையத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. உரிய வயது பூர்த்தியடையாமல் பெண்ணுக்கு திருமணம் செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் மல்லசமுத்திரத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், குழந்தைகள் நலக்குழுமத்தில் சிறுமியை ஆஜர்படுத்தும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அலங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமணத்தை குழந்தைகள் நல பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், சிறுமியின் பெற்றோரிடமும் பெண்ணுக்கு திருமணம் செய்யமாட்டோம் எனவும், எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கப்பட்டது.