தமிழகம்

ஷேர் ஆட்டோ பாணியில் மினிபஸ்

விவேக் நாராயணன்

சென்னை மாநகரத்தில் 100 மினிபஸ்கள் ஓடுகின்றன. விரைவில் மேலும் 100 மினிபஸ்கள் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோ நிறுத்த அனுமதி இல்லை என்பதால் மக்கள் குடியிருப்பு மற்றும் ஷாப்பிங் மால்கள் அருகில் சென்று ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிக் கொள்கின்றனர்.

அதே பாணியை தற்போது மினிபஸ்களும் கடைபிடிக்கவுள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், மற்று ஐடி நிறுவனங்களின் வாசல் ஆகிய இடங்களில் மினிபஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எழும்பூர் மற்றும் செண்ட்ரல் ரயில் நிலைய வாசல்களிலும் மினிபஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷேர் ஆட்டோக்களின் வருவாய் பகுதிகளையும் தங்கள் பக்கம் ஈர்க்க இந்த மினிபஸ் திட்டம் கொண்டு வரப்பட்டு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாளொன்றுக்கு சென்னையில் மினிபஸ்களில் மட்டும் சராசரியாக 77,500 பேர் பயணிக்கின்றனர். இதன் மூலம் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த மினிபஸ்களின் ஓட்டுனர்கள் பயணிகள் கேட்கும் இடத்தில் நிறுத்தி இறக்கி விடுகிறார் என்பதால் மக்கள் இந்தப் பேருந்துகளை அதிகம் விரும்புகின்றனர்.

ஷேர் ஆட்டோக்களை அவ்வளவு எளிதில் சாய்த்து விடமுடியாது என்றாலும், மினிபஸ்கள் இன்னும் அதிகப்படுத்தப்பட்டால் ஷேர் ஆட்டோக்களை நம்பும் நிலையும் மாறும். பொதுவாக மக்கள் பேருந்துக்காக 5 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க பொறுமை இல்லாதிருப்பதால் ஆட்டோக்களும் ஷேர் ஆட்டோக்களும் பிழைத்து வருகின்றன.

SCROLL FOR NEXT