தமிழகம்

தங்கம் கடத்திய 7 பெண்கள், விமான நிலையத்தில் பிடிபட்டனர்: மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டு வந்த சென்னை அசோக் நகரை சேர்ந்த ராணி (43) என்பவரை சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் தனது உள்ளாடையில் தலா 100 கிராம் எடையுள்ள 14 தங்க பிஸ்கெட்களை மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அதேபோல மலேயாவில் இருந்து நேற்று சென்னை வந்த சம்பத்குமார் என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் ஒரு கிலோ 450 கிராம் தங்கம் இருப்பது தெரிந்தது. பின்னர் பாங்காக்கில் இருந்து வந்த மன்மீட் சிங் என்பவரின் சூட்கேசில் 690 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அந்த 3 பேரையும் கைது செய்த அதிகா ரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அபராதம் கட்டிய 6 பெண்கள்

சிங்கப்பூரில் இருந்து விமானத் தில் வந்த வடிவழகி (48), பிங்காரா (40), மாரியம்மாள் (50), ஜீனத் (38) ஆகியோரை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அவர்கள் 4 பேரும் ஆசன வாயில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் 1.5 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னையை சேர்ந்த கனியம்மாள் (39), பேகம் (54) ஆகி யோரை பரிசோதனை செய்தபோது செல் போன் பேட்டரி வடிவில் 250 கிராம் தங்கம் மற்றும் கருப்பு நிற பெயிண்ட் அடித்த 100 கிராம் தங்க பிஸ்கட் இருப்பது தெரியவந்தது. அந்த 6 பெண்களும் அபராதம் கட்டிவிட்டு தங்கத்தை பெற்றுச் சென்றனர்.

விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்குள் இருந்தால், கைது நடவடிக்கை இருக்காது. அவர்கள் அபராதத் தொகையை கட்டிவிட்டு தங்கத்தை பெற்றுச் செல்லலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT