முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூரில் நடந்து வரும் வழக்கில் அவருக்கு எதிராக ஆஜராகி வரும் திமுக வழக்கறிஞரும், தருமபுரி மக்களவை முன்னாள் உறுப்பினருமான தாமரைச் செல்வன், தனக்கு பாதுகாப்பு கேட்டு தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 3-வது தரப்பினரான, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி வருகிறேன்.
தீர்ப்பு நாளன்று தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது அதிமுக-வினரால் அல்லது அவர்களின் தூண்டுதல் பெயரில் சமூக விரோதிகளால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 27-ம் தேதி எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.