தமிழகம்

சாதி மற்றும் பாலின ரீதியாகத் துன்புறுத்தல்: உடன் பணிபுரியும் நபர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார்

டெனிஸ் எஸ்.ஜேசுதாசன்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணிபுரியும் தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன், உடன் பணிபுரியும் நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறிப் புகார் அளித்துள்ளார்.

தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னை சாதிய ரீதியாகவும், தன் பாலின அடையாளம் குறித்தும் இழிவாகப் பேசி தொந்தரவு அளிப்பதாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சாந்தி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தான் ஒரு பெண் அல்ல என அலுவலகத்தில் அந்நபர் வதந்தி பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சாந்தி சவுந்தரராஜனுக்கு நெருக்கமான ஒருவர் ‘தி இந்து’விடம் பேசும்போது, அந்நபர் சாந்திக்கு பல ஆண்டுகளாக தொந்தரவு அளித்து வருவதாகவும், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சாந்தியைப் பயிற்சியாளர் பணி செய்ய விடாமல், அண்மையில் அலுவலகப் பணிக்கு மாற்றி விட்டதாகவும் கூறினார்.

மேலும், சாந்தியின் நண்பர்கள் சிலர் கூறுகையில், “பயிற்சி பெறும் மாணவர்களிடம் ‘மிஸ்டர்’ சாந்தி எங்கே? என்றுதான் அந்நபர் கேட்பார். சாந்தி ஏன் ஆண்கள் கழிவறையை உபயோகிக்காமல், பெண்கள் கழிவறையை உபயோகிக்கிறார் என கேட்டு அவமானப்படுத்துவார்” என கூறுகின்றனர்.

விளையாட்டுத் துறையில் ஏற்கெனவே சாந்தி தன் பாலின அடையாளம் குறித்து பல தடைகளைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் உடனிருந்த மதுரையைச் சேர்ந்த மாற்றுப்பாலின ஆர்வலர் கோபிசங்கர் கூறுகையில், “தனக்கு அரசுப் பணி வழங்கியதற்காக சாந்தி தமிழக அரசுக்கு நன்றி உணர்வுடன் இருக்கிறார். ஆனால், அவருடன் பணிபுரிபவர் அவருடைய பாலினம் குறித்தும், சாதி குறித்தும் அவரைச் சீண்டுகிறார். இது பாலியல் துன்புறுத்தல். நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவருக்கு நீதி கிடைக்கப் போராடுவோம். இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிப்போம்” என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீடா ஹரீஷ் தாக்கூர் கூறுகையில், “இதுதொடர்பாக சாந்தி வியாழக்கிழமை என்னை சந்தித்துப் புகார் அளித்தார். ஏன் ஏற்கெனவே புகார் அளிக்கவில்லை என நான் அவரிடம் கேட்டேன். இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT