தமிழகம்

கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா ‘குளுகுளு’ சீசனால் களைகட்டிய கொடைக்கானல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கொடைக்கானல் கோடை மலர் கண்காட்சிக்காக தயாராகும் பிரை யண்ட் பூங்காவில், 3 லட்சம் மலர்கள் கண்களைக் கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. குளுகுளு சீசன், சாரல் மழையால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். தற்போது தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததால் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு சீசனை அனுபவிக்க கார், வேன்களில் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள், இயற்கை எழில் கொஞ்சும் பசுமைப் பள்ளத்தாக்கு, எந்தவித துணையும் இல்லாமல் தனித்து நிற்கும் பில்லர் ராக், பைன் மரக்காடு, குணா குகை ஆகிய சுற்றுலா இடங்களைக் கண்டு ரசித்து மகிழ்ச்சியடைகின்றனர். அதனால் கோடை விழாவுக்கு முன்பே கொடைக்கானல் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு 53-வது கொடைக்கானல் மலர் கண்காட்சி, பிரையண்ட் பூங்காவில் மே இறுதியில் நடைபெறவுள்ளது. அதனால், கோடை விழா மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவை தோட்டக்கலைத் துறை யினர்தயார் செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறையினர் 3 லட்சம் மலர் நாற்று களை நடவு செய்தனர்.

பருவமழைகள் ஏமாற்றியதால் இந்த ஆண்டு கோடை விழாவுக்குள் செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்து குலுங்குமா என தோட்டக்கலைத் துறையினர் கவலையில் இருந்தனர்.

ஆனால், கடந்த இரு மாதங்களாக பெய்த சாரல் மழையில் மலர் நாற்றுகள் துளிர்விட்டு செழித்து வளர்ந்து தற்போது வண்ண வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கி வருகின்றன. சால்வியா, பேன்சி, டயான்தஸ், மெரி கோல்ட், லூப்பின், ஆஸ்டர் மற்றும் டேலியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்குவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை புனரமைக்கப்பட்டு, அவற்றில் 200-க்கும் மேற்பட்ட மலர் மற்றும் கள்ளிச் செடிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT