முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது, ஜூலை 22-ம் தேதி சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்காக செப். 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.