பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் கே.பழனிசாமி அனுப்பி யுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “தங்களின் இனிய பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் வலிமை யுடனும் வாழ்ந்து இந்திய நாட்டுக் கும் மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு அனுப் பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “தங்களுக்கு மனம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தங்களுக்கு நல்ல உடல்நலத்தையும் நீண்ட ஆயுளையும் தருமாறும் தங்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை நாட்டுக்கு தொடர்ந்து கிடைக்கவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்களது தொலைநோக்கும் திறமையான தலைமையின்கீழ், வரும் காலத்தில் இந்தியத் திருநாடு, இன்னும் உச்சத்தைத் தொடும் என்று உறுதியாக கூறுகிறேன். மாணவர்களுக்காக தாங்கள் எழுதிய ‘பரீட்சைக்கு பயமேன்’ என்ற புத்தகம் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரிதும் ஊக்கம் அளிக்கும்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நீங்கள் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென வாழ்த்து கிறேன்” என்று தெரிவித்துள் ளார்.
இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்
நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் மேலாண்மையை உலகம் ஏற்கும் வகையில், தங்களின் ஆட்சிப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும்படி தங்களின் பொது வாழ்வுப்பணி தூய்மையானதா கவும், நேர்மையானதாகவும் உள் ளது. உங்களோடு இணைந்து பணி யாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்.
இத்தேசப் பணி மேன்மேலும் தொடர, தாங்கள் பிறந்த இந்த நன்னாளில் வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங் கள் வழங்கப்பட்டன. சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மோதிரம் அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
மேலும், தமிழக பாஜக மாநில கூட்டுறவுப் பிரிவு மற்றும் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறுமிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், பயனாளர்களுக்கு எரிவாயு அடுப்பு வழங்கினர்.