தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் பேருந்து நிலையம்: தி இந்து - உங்கள் குரல் மூலம் அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

பெங்களூர் விமான நிலையம்போல, சென்னை விமான நிலைய வளாகத்தில் பேருந்து நிலையம் அமைத்து, மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ‘தி இந்து – உங்கள் குரல்’ சேவையில் ஒரு வாசகர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் செல்வம் என்பவர் கூறும்போது, ‘‘சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விமான நிலைய வளாகத்தில் பிரத்தியேகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதுதொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். விமான நிலைய வளாகத்துக்குள் அரசு பேருந்துகள் வருவதில்லை. பஸ் பிடிக்க சுமார் அரை கி.மீ. தூரம் நடக்க வேண்டியுள்ளது. இது சிரமமாக இருப்பதால், பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர். அவர்களும் நியாயமான கட்டணம் வாங்குவதில்லை. விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்ல ரூ.500, அண்ணாநகர் செல்ல ரூ.650, அம்பத்தூர் செல்ல ரூ.750 என அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

பெங்களூர் விமான நிலைய வளாகத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கு பெரும்பாலோர் அரசு பேருந்துகளில் செல்கின்றனர். ஒரு சிலரே கால்டாக்ஸிகளில் செல்வார்கள். சென்னையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு விமானம் வந்திறங்கினால், சராசரியாக 50 கால் டாக்ஸிகள் இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன.

விமான நிலையத்தில் தமிழக அரசு பிரத்தியேகமாக ஒரு பேருந்து நிலையம் அமைத்து, மாநகரப் பேருந்துகள் அங்கு வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். பயணிகளின் குறையும் தீரும்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

SCROLL FOR NEXT