செங்கோட்டையில் இந்து அமைப்பினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி தின ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையையடுத்து, செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் நேற்றிரவு (வியாழக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் ஒரு விநாயகர் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த கடைகளையும், வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் லேசான தடியடிப் பிரயோகம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் இந்து அமைப்புகள் மற்றும் விநாயகர் சிலை அமைப்புக் குழு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரச்சினைக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கோட்டையில் வழக்கமாக விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் பகுதி வழியாகவே எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையிலும், வழக்கமான பாதையில் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. கோஷம் போடக்கூடாது என்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நிலைமை பதற்றமாக இருப்பதால் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் சனிக்கிழமை காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கும் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.