தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ. 16 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நபர் ஒருவருக்கு நாளென்றுக்கு 70 லிட்டர் தண்ணீர் வழங்கப் படுவதாகவும் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் எம்.எஸ்.மலையமான் திருமுடிக்காரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், வழக்கமாக பெய்யக் கூடிய சராசரி அளவில் 20 சதவீதம் கூட மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பல அடி ஆழம் கீழே இறங்கிவிட்டது. இதனால் பல போர்வெல்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. தற்போது 80 சதவீதம் நீர்நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் மக்கள் அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களை வறட்சி பாதித்த மண்டலமாக மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 16 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பேரூராட்சிகளின் இணை இயக்குநர் ( திட்டம்) எம்.எஸ்.மலையமான் திருமுடிக்காரி கூறியதாவது:
தமிழகத்தில் 528 பேரூராட்சி களில் 335 கூட்டு குடிநீர் திட்டங்கள் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 51 தனி குடிநீர் திட்டம், 142 உள்ளூர் நீர் ஆதாரங்கள் உள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 190.92 கோடியில் உறை கிணறு அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, குழாய் பதிப்பு உள்ளிட்ட 4,384 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
70 லிட்டர் தண்ணீர்
மேலும், அனைத்து பேரூராட்சி களிலும் 18,266 கைப்பம்புகளும் 828 மின் விசைப்பம்புகளும் 17,614 சிறு மின் விசைப்பம்புகளும் 3,650 நீர் உறிஞ்சி கிணறுகளும் 1,611 கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி களும் 5,239 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும் உள்ளன.
இதன் மூலம் 80 சதவீத பேரூராட்சிகளில் தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதி உள்ள பேரூராட்சிகளில் 2 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 70 லிட்டர் தண்ணீர் என்ற கணக்குபடியே விடுபட்ட நாட்கள் அனைத்துக்கும் சேர்த்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசால் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 16 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பேரூராட்சிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.