போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றால் கருத்து வேறுபாடுகள் மறைந்து காங்கிரஸ் வலுவடையும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை ப.சிதம்பரம் தொடங்கிவைத்தார். அப்போது அவரின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், ''காந்தி மற்றும் நேரு காலத்தில், சிறைச்சாலைகளில்தான் பெரிய விவாதங்கள் நடைபெற்றன. மிகப்பெரிய போராட்டங்களுக்கு சிறைச்சாலைகள்தான் வித்திட்டன.
ஆகவே போராட்டம் நடத்தி அனைவரும் சிறைக்குச் செல்லலாம். 15, 20 நாட்கள் நாம் சிறையில் இருந்தால், எல்லாக் கருத்து வேறுபாடுகளும் மறையும். காங்கிரஸ் கட்சி வலுப்பெறும். கட்சிக்காகத் தொண்டர்கள் சிறைக்குச் சென்றால், நானும் சிறைக்குச் செல்லத் தயாராக உள்ளேன்'' என்றார் ப.சிதம்பரம்.