தமிழகம்

வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவே 24*7 கடைகள் திறப்பு அரசாணை வெளியானது: நிலோஃபர் கபில்

செய்திப்பிரிவு

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலேயே தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசாணை வெளியிட்டிருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் தொழில் வர்த்த்க நிறுவனங்கள் வாரத்திற்கு 7 நாட்களிலும், 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், ''இந்த அறிவிப்பின்மூலம் பல்வேறு தரப்பு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தொழிலதிபர்களுக்கும் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். இந்த அறிவிப்பால் தொழிலாளர்களும் தொழில் வழங்குவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது வேலைக்குச் செல்லும் மக்கள், வேலை முடிந்து வீடு திரும்பி வந்தபிறகு, ஷாப்பிங் செய்ய மிகவும் வசதியாக இருக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலேயே தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையிடம் இதுகுறித்து முன்னரே ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி காவல்துறையினர் சார்பில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றார் அமைச்சர் நிலோஃபர் கபில்.

SCROLL FOR NEXT