படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.
*
வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- கனகவல்லி. இவர்களின் மகள்கள் கோடீஸ்வரி மற்றும் சங்கீதா இருவரின் மேற்படிப்புக்காக நிதியுதவி கோருகிறார் தாய் கனகவல்லி.
இதுகுறித்துக் குரல் நடுங்கப் பேசுகிறார் கனகவல்லி. ''வீட்டுக்காரருக்கு 7 வருஷமா உடம்பு சரியில்லீங்க. எந்த வேலைக்கும் அவரால போகமுடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. திடீர்னு கோபப்படுவாரு, தானாப் பேசுவாரு. தூக்க மாத்திரை சாப்பிட்டாதான் அவரால தூங்க முடியும்.
அதனால வீட்டு வேலை செஞ்சுதான் குடும்பத்தைக் காப்பாத்தறேன். முன்னாடி நாலஞ்சு வீடுகள்ல வேலை செஞ்சேன். இப்போ ஒரு வீட்ல மட்டுந்தான் வேலை. அதுல கிடைக்கற 2 ஆயிரத்துக்கு 500 ரூபாய்ல எல்லா செலவுகளையும் செய்யணும்.
மூத்தவ கோடீஸ்வரி வேலூர், வூரீஸ் காலேஜ்ல பி.எஸ்சி மேத்ஸ் படிக்கறா. அவளுக்கும் ரூ.15 ஆயிரம் கட்டணும். சின்னவ ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகப் போறா. எஸ்எஸ்எஸ் காலேஜ்ல பிஎஸ்சி கெமிஸ்ட்ரி சேர்த்திருக்கோம். அவளுக்கு ரூ.17 ஆயிரம் கட்டணும். கூடவே பஸ் ஃபீஸ் 5 ஆயிரம் கட்ட சொல்லி இருக்காங்க.
எங்களுது நல்லா வாழ்ந்த குடும்பமுங்க. இன்னிக்கு இந்த நிலைல நிக்கறோம். ரேஷன் கடைல அரிசி வாங்கிப்பேன். அக்கா பையன் உதவுவான். ஹவுஸ் ஓனர் நல்ல மாதிரி. அவங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாங்க. முடியறப்போ வாடகை கொடுப்பேன். முடியாதப்போ கேக்கமாட்டாங்க. சிரமத்துலயே வாழ்க்கை ஓடுது. உடம்பு சரியில்லன்னாக் கூட ஆஸ்பத்திரிக்குப் போகமுடியாது. யாராவது உதவி செஞ்சா நல்லா இருக்கும்'' என்கிறார் தாய் கனகவல்லி.
தயக்கத்துடன் இதுபற்றிப் பேசுகிறார் கோடீஸ்வரி. ''இப்போ தேர்ட் இயர் போறேன் மேம். முடிச்சுட்டு வேலைக்குப் போகணும். அப்படியே கவர்மெண்ட் எக்ஸாம்சுக்கும் தயாராகிட்டு இருக்கேன்'' என்கிறார்.
எதனால் கணிதப்பிரிவை எடுத்தீர்கள் என்றதற்கு, ''எனக்கு நர்ஸிங் படிக்கணும்தான் ஆசை. அந்த வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா... அதுக்கு நிறையப் பணம் கட்டமுடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. வீட்டு நிலைமைய புரிஞ்சுகிட்டு நானும் மேத்ஸ் சேர்ந்துட்டேன்'' என்று வார்த்தைகளை விழுங்கி, தொண்டை கமறப் பேசுகிறார். மேலும் பேசும் கோடீஸ்வரி, ''மொதல்ல கஷ்டமா இருந்துது. அதுக்கப்பறம் செட் ஆகிடுச்சு. இப்போ நல்லா படிக்கறேன்'' என்கிறார்.
கல்லூரி முதலாண்டு செல்லும் சங்கீதாவுக்கு இன்னும் குழந்தைக் குரல் மாறவில்லை. ''எப்படியாவது காலேஜ் பீஸ் கட்டணும் மேம்'' என்று சொல்கிறார்.
இவர்கள் இருவருக்கும் கல்லூரிக் கட்டணம் கட்டக் கடைசித் தேதி ஜூலை 3, 2019.
உதவ விரும்பும் உயர் உள்ளங்களுக்காகக் காத்து நிற்கிறார் தாய் கனகவல்லி. சிறிய தொகை என்றாலும் தம்மாலான உதவியைச் செய்யலாம்.
கோடீஸ்வரி மற்றும் சங்கீதாவுக்கு உதவ விரும்புவோர்
தொடர்பு கொள்ள: கனகவல்லி- 7825074600
உதவ: Kotteswari. K
வங்கிக் கணக்கு எண்: 33894928479
SBIN0001618,
State Bank of India
Vellore.
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in