மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என ராகுல் காந்தி பேசினார். இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி நாளை திறக்கப்பட உள்ளது.
பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் சேலம் செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றம் இல்லை. குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதிமுக ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்காது. நான் எப்போது மும்மொழிக் கொள்கையை ஆதரித்தேன்?
என் ட்விட்டரில் என்ன தவறு? இன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். அப்படி வசித்து வருபவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்க ஆசைப்படுகிறார்கள். அவர்களது ஆசையை விருப்பப் பாடமாக வைக்க பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன். அதைச் செய்ய மத்திய அரசு, பிரதமரால்தான் முடியும்.
ஆனால், இதை பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கிளப்பிவிட்டன. எங்கள் நிலைப்பாட்டை துணை முதல்வர் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார். இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும். அதை மற்ற அமைச்சர்களும் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர்.
நான் ட்விட்டரில் வெளியிட்ட அந்தக் கருத்தை திருத்தி வெளியிட்டதற்கு வருத்தப்படுகிறேன். நம்முடைய தமிழர்கள், தமிழ் மொழி பேசுபவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையை நான் வைத்தேன்.
இதற்கெல்லாம் ஆர்வமாக வேகமாக துடிப்போடு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் தராத நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறார்?
அதுவும் இல்லாமல் நாங்கள் வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்கிறார்களே? இப்போது இவர்கள்தான் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வந்துவிட்டார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. அங்கு பேசி தமிழகத்துக்குச் சேரவேண்டிய நீரைத் திறந்து விடச் சொல்லுங்கள் பார்க்கலாம்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.