சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த மாதம் கத்திரி வெயில் உச்சத்தை எட்டியது. ஜூன் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் கொஞ்சம்கூட குறையவில்லை.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவிலும் திடீர் திடீரென மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சூளைமேட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கூறியதாவது:
சூளைமேட்டில் நான் வசிக்கும் திருவள்ளுவர்புரம் 2-வது தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று இரவுகூட 2 முறை மின்தடை ஏற்பட்டது. மீண்டும் அதிகாலையில் ஏற்பட்ட மின்தடை மதியம் வரை நீடித்தது.
இதனால், மக்கள் இரவு நேரத்தில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
மேலும், குறைந்த மின்னழுத்த பிரச் சினையும் காணப்படுகிறது. இதனால், வீட்டில் உள்ள ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.
மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாததால், மின்தடை குறித்து புகார் அளிக்க முடியவில்லை. இரவு நேரத்தில் போனை யாரும் எடுப்பதே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, வடசென்னை, வேளச்சேரி, வில்லி வாக்கம், தி.நகர், மயிலாப்பூர், பல்லாவரம், குன்றத் தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் அடிக் கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.