தமிழகம்

நீட் தேர்வு முடிவு வெளியானது: தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி: 59 ஆயிரம் பேர் தேர்ச்சி

செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 14 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வின் முடிவு இன்று வெளியானது. இதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2019-20 கல்வியாண்டில்  நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் தாக்கியதால் தேர்வு 20-ம் தேதி நடந்தது.

தமிழகத்தில் 14 நகரங்களில் உள்ள 188 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து  1 லட்சத்து 40 பேர் விண்ணப்பித்தனர்.  இதில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் (93 சதவீதம்) தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 2 மணிநேரம் முன்பாகவே வெளியானது.

www.nta.ac.in, www.ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் நீட் நுழைவு தேர்வுக்கான முடிவு வெளியானது. 

தமிழகத்தில் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடை 9.01% சதவீதம் அதிகரித்துள்ளது.  அதாவது தமிழகத்தில் இருந்து 59 ஆயிரத்து 785 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக்தில் இருந்து தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் எந்த மாணவியும் வரவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி என்ற மாணவி அகில இந்திய அளவில் 57-வது இடத்தைப் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் இருந்து அதிகபட்சமாக 3 மாணவர்கள் முதல் 50 இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

          
SCROLL FOR NEXT