பரம்பிக்குளம் அணையின் பக்கவாட்டுப் பகுதியில், மலைகளுக்கு இடையே காணப்பட்ட இடைவெளியைப் பூர்த்திசெய்ய கட்டப்பட்டதே `எர்த் டேம்’. பரம்பிக்குளம் அணையின் பின் பகுதியில் மலையின் இடது பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு கணவாய்போல ஒரு இடைவெளி இருந்தது. அங்கு குறைவான உயரத்தில் மண் அணை அமைப்பதன் மூலம், இடைவெளியை சரிசெய்ய முடியும் என முடிவு செய்த தலைமைப் பொறியாளர் ஆனந்த ராவ், `எர்த் டேம்’ அமைக்கும் முழு பொறுப்பையும் உதவி செயற் பொறியாளர் பிரபாகரனிடம் ஒப்படைத்தார். அவருக்கு உதவியாக 4 இளம் பொறியாளர்கள் பணியாற்றினர்.
சுமார் 3 ஆண்டுகள் கனரக இயந்திரங்களின் உதவியுடன், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் பரம்பிக்குளம் அணையின் பின்பகுதியில் `எர்த் டேம்’ அமைக்கப்பட்டது.
பரம்பிக்குளம் அணை வடிவமைப்பின்போது, அணையிலிருந்து பெரிய குழாய் அமைத்து, தமிழகப் பகுதிக்குள் தண்ணீர் கொண்டுவர பொறியாளர்கள் திட்டமிட்டனர். அதற்கான செலவை கணக்கிட்டதில், மயக்கமே வரும் அளவுக்கு திகைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காகும் செலவில், அப்பகுதியில் கூடுதலாக ஓர் அணையையே கட்டிவிடலாம் என்று தீர்மானித்தனர். மேலும், புதிய அணையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் கிடைக்கும் தண்ணீரையும் சேமிக்க முடியும் என்பதைக் கணக்கிட்ட, ஆனந்த ராவ் தலைமையிலான மூத்த பொறியாளர்கள் குழுவினர், ஒரு பொறியியல் அதிசயத்தை நிகழ்த்தினர்.
மதகுகளே இல்லாத அணை!
அதுதான் இரட்டை அணை. இந்தியாவில் கட்டப்பட்ட ஒரே இரட்டை அணை பிஏபி திட்டத்தில் மட்டுமே உள்ளது. அது, பெருவாரிப்பள்ளம்-தூணக்கடவு என்னும் இரட்டை அணைகளாகும். இது சமநிலைமட்ட அணையாகும். பெருவாரிப்பள்ளம் அணைக்கு மதகுகளே கிடையாது. தூணக்கடவு அணையில் தண்ணீர் நிரப்பினால், பெருவாரிப்பள்ளம் அணை நிரம்பும். அப்படி ஒரு பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த இரட்டை அணைகள்.
பரம்பிக்குளம் அணை யிலிருந்து 8,120 அடிநீளம்கொண்ட சுரங்கத்தின் வழியாக, விநாடிக்கு 1,400 கனஅடி அளவில் கொண்டுவரப்படும் தண்ணீரையும், 22 சதுர மைல் பரப்பில், ஆண்டுக்கு 70 அங்குலம் பெய்யும் மழைநீரையும் சேமித்து வைக்க, 1,108 அடி நீளமும், 85 அடி உயரமும் கொண்ட தூணக்கடவு அணை கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 557 மில்லியன் கனஅடி. இந்த அணையின் உச்ச நீர்மட்டம் (கடல் மட்டத்திலிருந்து ) 1,770 அடியாகும். அணையின் நீர்ப்பரப்பு 1.67 சதுர மைல்கள்.
அருகிலேயே பெருவாரிப்பள்ளம் என்ற இடத்திலும் 620 மில்லியன் கனஅடி மழைநீர் கிடைப்பதைக் கண்டறிந்த பொறியாளர்கள், அங்கு 32.50 லட்சம் மதிப்பில் 466 அடி நீளம், 91 அடி உயரத்தில் அணையைக் கட்டினர்.
இந்த அணையின் நீர்பரப்பு 1.12 சதுரமைல்கள். இந்த அணையின் உச்ச நீர்மட்டம் 1,770 அடி.
இந்த அணையிலிருந்து நீர் வெளியேற மதகுகளே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருவாரிப்பள்ளம் அணையும், தூணக்கடவு அணையும் சமநிலைமட்ட அணைகளாகும். இரு அணைகளும் நேரடியான கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இரு அணைகளில் எந்த அணைக்கு நீர்வரத்து இருந்தாலும், ஒரே நேரத்தில், ஒரே மட்டத்துக்கு இரு அணைகளும் நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூணக்கடவு அணையில் நீர் வெளியேற்றப்பட்டால், தூணக்கடவு அணையின் நீர்மட்டத்துக்கே, பெருவாரிப்பள்ளத்தின் அணை மட்டமும் குறையும். இதுபோன்ற பல பொறியியல் அதிசயங்கள் கொண்டதுதான் பிஏபி திட்டம்.
சமநிலைக்கோட்டு வாய்க்கால்!
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில், கி.பி. 1018-1054-ல் ராஜாதிராஜன் காலத்தில் கட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால்தான், தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் சமநிலைக்கோட்டு வாய்க்காலாகும். அதற்குப் பின்பு தமிழகத்தில் கட்டப்பட்ட சமநிலைக்கோட்டுக் கால்வாய் என்ற பெருமை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உள்ள காண்டூர் கால்வாய்க்கே உண்டு.
தற்போது பயன்பாட்டில் உள்ள, ஒரே சமநிலைக்கோட்டுக் கால்வாயான இதன் நீளம் 49.50 கிலோமீட்டர். சர்க்கார்பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் பயணத்தைத் தொடங்கும் காண்டூர்க் கால்வாய், மலை இடுக்குகளின் வளைவுகளில் நுழைந்து, பள்ளத்தாக்குகளின் நெளிவுகளில் பாய்ந்து, 10 சுரங்கங்களின் வழியாகப் பயணித்து, பல செங்குத்தானப் பாறைகள், சாய்வான மண் அமைப்புகளைக் கடந்து, கிட்டத்தட்ட ஆனைமலை மலைத்தொடர் முழுவதும் ஊடுருவிச் செல்கிறது.
இதற்காக மலைச் சுரங்கங்களில் நீர் நுழைவுப் பகுதி, சூப்பர்பாசேஜ், அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றும் வழி, ரெகுலேட்டர்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், அதிக பட்சமாக விநாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் சுரங்கத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீரை காண்டூர்க் கால்வாய் 49.50 கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்கிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சமநிலைக்கோட்டுக் கால்வாய் அமைக்க, பல இடங்களில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன, சுரங்கங்கள் வெட்டப்பட்டன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்ட ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களில் ஆண்கள் பாறைகளை உடைக்க, பெண்கள் கற்களைச் சுமந்தனர்.
பிஏபி பயணம் தொடரும்...