நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையப் பகுதி மற்றும் டிடிகே சாலை போன்ற பகுதிகளில் உள்ள 43 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீர்நிலைகளில் மாசு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருவாய்த் துறையினர் சார்பில் தொடர்ந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை முதல் இந்தக் கடைகளை ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிடிகே சாலை வெலிங்டன் ராணுவ மையத்திற்குச் செல்லும் முக்கிய சாலை ஆகும். இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் ராணுவ மையத்திற்குச் செல்லும்போது சிரமம் ஏற்படுவதாகவும் ராணுவத் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும். பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஓடை நீர் மாசுபடாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.