தமிழகம்

கலை, அறிவியல் கல்லூரியில் 5 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்படுமா? - மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு நிரப்பப்படுமா என்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசால் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, அனைத்து அரசு மற்றும் பிற அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களிலும் குறைந்தபட்ச மாற்றுத்திறனுக்கு 5 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கேட்டு விண்ணப்பித்தால் இட ஒதுக்கீடு அடிப்படையில் சீட் வழங்குவதில்லை.

கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு 20 சதவீதம் இடங்களை கல்லூரி நிர்வாகமே அதிகரித்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்ய கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் பல்வேறு தடைகளை கடந்து உயர் கல்வி படிக்க வரும் மாற்றுத்திறனாளி மாண வர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படுமா என்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் முனைவர் க.சண்முகவேலாயுதம் கூறிய தாவது:

உயர்கல்வியில் மாற்றுத்திற னாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுத்துவ தில்லை. பெயரளவுக்கு செயல் படுத்தும் ஒரு சில கல்லூரிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு சீட் அளித்தாலும் அவர்கள் கேட்கும் துறையை தராமல் யாரும் வந்து சேராத துறைகளையே வழங்கு கின்றனர்.

இவ்வாறு, செய்வதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உயர் கல்விக்கு வராமல் படிப்பை பாதியிலேயே விடும் சூழலும் ஏற்படுகிறது. உயர்கல்வித் துறை செயலாளர் அனைத்து கல்லூரி களும் 5 சதவீதம் இட ஒதுக் கீடு அடிப்படையில் மாற்றுத்திற னாளிகளுக்கு சீட் வழங்க ஆணையிட வேண்டும்.

இதை செயல்படுத்தாத கல் லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக் கீடு அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்லூரிகளில் சீட் ஒதுக்கீடு செய்யப்படுவதை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்று மாணவர் சேர்க்கையின்போது பலகையில் எழுதிப் போட வேண்டும். அப்போதுதான் வெளிப் படைத்தன்மையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, டிசம்பர் 3 (மாற்றுத்திறனாளிகள் தினம்) இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.அண்ணாமலை கூறும்போது, “பிரபல அரசு உதவி பெறும் கல்லூரிகளில்கூட 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர்கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். அந்தந்த கல்லூரிகளின் வலைத்தளங்களில் எத்தனை சீட்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT