தமிழில் தன்னாட்சி என்று பொருள்படும் ‘Autonomous' என்ற வார்த்தை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். அவரது புதிய ட்வீட் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் அபிமானத்தையும் பெற்று வருகிறது.
ஏற்கெனவே மும்மொழி திட்டத்திற்கு எதிராக ட்வீட் செய்திருந்த நிலையில் தற்போது தன்னாட்சி குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதனால் ரஹ்மான் மத்திய அரசை தொடர்ந்து சீண்டுகிறாரா என்று அவரது ட்விட்டர் டைம்லைனில் பின்னூட்டங்கள் பதிவாகி வருகின்றன.
முன்னதாக புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்திருந்தார். புதிய கல்விக் கொள்கையில் இருந்த மும்மொழி பாடத் திட்டத்திற்கு எதிராக குரல் எழ ட்விட்டரில் தமிழ்நாடு இந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேக்ட்ரெண்டானது. பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
அப்போது மரியான் படத்தில் இடம்பெற்ற பாடலை பஞ்சாபி பாடகர் ஒருவர் பாடுவதைப் பகிர்ந்து தமிழ் பஞ்சாபில்கூட வளர்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம் என பரவலாக எதிர்ப்பு கிளம்பு கல்வி வரைவு திட்டத்தில் இந்தி கட்டாயமல்ல என்று மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், "அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!" என ட்வீட் செய்திருந்தார்.
தற்போது தமிழில் தன்னாட்சி என பொருள்படும் ‘Autonomous' வார்த்தை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
‘Autonomous' என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிட்ஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை அதற்கான சுட்டியுடன் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் on fire என்று ட்வீட் செய்து வருகிறார்கள். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.