தமிழகம்

மது போதையில் கார் ஓட்டி விபத்து, போலீஸார் மீது தாக்கு, அவதூறு பேச்சு; தொழில் அதிபர் கைது: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாருடன் வாக்குவாதம் செய்து தாக்கியதொழில் அதிபரை போலீஸார் கைது செய்தனர். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. நீலாங்கரை அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த ஆட்டோவில் மோதியது.

அதன் பின்னரும் காரை நிறுத்தாமல் அதே வேகத்துடன் காரை ஓட்டியவர் சுவரில் மோதினார். அதிகாலை நேரம் என்பதாலும், சாலை மற்றும் ஆட்டோவில் யாரும் இல்லாததாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காருக்குள் பாதுகாப்பு வசதிகள் இருந்ததால் அதை ஓட்டி வந்தவருக்கும் காயம் ஏற்படவில்லை.

சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் விரைந்து வந்து, காரை ஓட்டி வந்த நபரை பார்த்தனர். அவர் மது போதையில் தள்ளாடினார். மதுபோதையில் நிதானமிழந்து காரை ஓட்டி வந்தது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீஸார், அந்த நபரை காரில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றபோது, அந்த நபர், போலீஸாரை தரக்குறைவாக பேசி தாக்கினார்.

விபத்து வழக்கு என்பதால் அந்த நபரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவான்மியூர் ராஜா சீனிவாசன் நகரை சேர்ந்த நவீன்(30) என்பதும், பழங்களை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதும் தெரிந்தது.

நவீன் மீது மது போதையில் கார் ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அவர் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT