எலியார்பத்தி சுங்கச்சாவடி நிறுவனம் மத்திய அரசிடம் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," மதுரை -தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை உள்ளது. இந்த சாலை 2011 ல் முதல் நான்கு வழிச்சாலையாக செயல்பட்டு வரும் நிலையில், எலியார்பத்தி என்னும் இடத்தில் சுங்கசாவடி உள்ளது. 2011 முதல் எந்த பராமரிப்பும் செய்யாததால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. மேலும் பேருந்துகளில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.
எனவே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை முதல் அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தியில் உள்ள சுங்கசாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் " எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையை முறையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி சுங்கசாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் 30 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த மனு நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில்,"சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் 5 வருடங்களுக்கு ஒருமுறை சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் உள்ளது.
ஆனால் சுங்கச் சாவடி நிறுவனம் அதனை கடைபிடிக்கவில்லை. இதனால் சாலை விபத்துகள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு சேதாரம் ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சுங்கச்சாவடி நிறுவனம் மத்திய அரசோடு செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.