நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டானது. சசிகலா சிறை செல்லும் முன் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கினார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார். சசிகலா சிறை சென்ற பின் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்தார். டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி அதிமுகவானது. தினகரன் அமமுக என தனி அணியாக இயங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை ஒருசேரத் தோற்கடித்ததன் மூலம் டிடிவி தினகரன் பெரிதும் கவனிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் அதிமுகவில் பெரும்பகுதியினர் இணைந்தனர். அவ்வாறு இணைந்தவர்களில் முக்கியமானவர் நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் முத்தையா. இவர் முதன்முதலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர். இதேபோன்று முக்கியமான நபர்களில் ஒருவர் மைக்கேல் ராயப்பன்.
மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் பெரிய சக்தியாக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்குச் சின்னம் கொடுப்பதிலிருந்து பல இடையூறுகள் ஏற்பட்டன. மறுபுறம் ஆளுங்கட்சி மெகா கூட்டணி என அதிமுக தேர்தலில் நின்றது. மிகப்பெரிய அலை அடித்த இந்தத் தேர்தலில் அமமுக வாக்குகள் வாங்கினாலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.
இதனால் அமமுகவுக்குள் சலசலப்பு உருவானது. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளருமான பாப்புலர் முத்தையா, நெல்லை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் இன்று அமமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அமமுக நெல்லை மக்களவை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது