தமிழகம்

6 மாத வாடகை பாக்கி: பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடகை பாக்கி தராததால் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குக் கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தாணிக்கோட்டகம் என்ற பகுதியில் நெடுஞ்செழியன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் அலுவலகம் வாடகையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கட்டிட வாடகையைத் தராமல் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்குவதாகவும், ரூ.37,500 தராமல் பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கட்டிட உரிமையாளர் நெடுஞ்செழியன் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குப் பூட்டு போட்டார். இதனால் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் அலுவலக ஊழியர்கள், நெடுஞ்செழியனுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் பாக்கித் தொகையை அளித்து விடுவதாகவும் உறுதி அளித்தனர்.

SCROLL FOR NEXT