தமிழகம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமன தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய  மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி முசிறியைச் சேர்ந்த பிரியா உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   814 கணினி ஆசிரியர் நியமனம் தொடர்பாக  கடந்த ஆண்டில்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இப்பணிக்காக கடந்த ஜூன் 23-ல் 119 தேர்வு மையங்களில் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. அப்போது இணையதள இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டதால் பலரால் தேர்வு எழுத முடியவில்லை.

இணையதள சேவை பாதிப்பால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு ஜூன் 27-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக ஆன்லைன் தேர்வு நடத்தினால் தேர்வில் குழப்பம் ஏற்படும். 2-ம் கட்டமாக தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே கணினிஆசிரியர் நியமனத்துக்காக  ஜூன் 23-ல் நடைபெற்ற ஆன்லைன் தேர்வை ரத்து செய்தும், ஜூன் 27-ல் நடக்கவிருக்கும் தேர்வுக்கு தடை விதித்தும், புதிய தேர்வு நடத்தி கணினி ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் அளிக்காமல் நேரடியாக நீதிமன்றம் வந்துள்ளார். இதனால் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT