கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறியைத் தொடர்ந்து வெளவால்கள் பழங்கள் சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த தேனி விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட மலையடிவாரப்பகுதியில் வெளவால்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. அவை உணவிற்காக மா,திராட்சை, கொய்யா தோப்புகளை சார்ந்துள்ளன.
கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறியைத் தொடர்ந்து வெளவால்கள் பழங்கள் சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருப்புதிராட்சை எனப்படும் பன்னீர் திராட்சை காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. ஆண்டுமுழுவதும் இவை விளைச்சல் தந்து கொண்டிருக்கிறது.
இதே போல் பெரியகுளம் அருகே கோயில்காடு, சோத்துப்பாறை, உப்புக்காடு, சித்தாறு, மணக்காடு,சுக்காம்பாறை, தொண்டைகத்தி, கும்பக்கரை, பாலாட்டி, முருகமலை, செழும்பு, போடி, குரங்கணி, வீரப்பஅய்யனார்கோயில் உள்ளிட்ட பல பகுதிகளில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கொய்யா உள்ளிட்ட இதுபோன்ற பழங்கள் விளைந்துள்ளன.
இப்பகுதி அனைத்துமே மலையடிவாரம் என்பதால் வெளவால் தொந்தரவு அதிகம் உள்ளது. பழங்களை குறிவைத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் இந்த வெளவால்கள் இரவானதும் ஆயிரக்கணக்கில் தோப்புகளில் முகாமிட்டு பழங்களை சேதப்படுத்துகின்றன.
விளைச்சலில் 10சதவீதத்திற்கும் மேல் இதனால் விரயமாகின்றன. திராட்சை தோட்டங்களைப் பொறுத்தளவில் வலைஅமைத்து தற்காக்கின்றனர். மாந்தோப்புகளைப் பொறுத்தளவில் கயறு வெடிகள் அமைத்து வெளவால்களை விரட்டி வருகின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்த விளைநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.
இதனால் வெளவால்களினால் ஏற்படும் சேதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் தென்பட்டுள்ளது. இந்த வைரஸ் வெளவால் கடித்த பழங்களை உண்ணும் போது தொற்றுகிறது. இதனால் காய்ச்சல், உடல் மற்றும் தலைவலி உருவாகி கடும் விளைவையும் ஏற்படுத்தும்.
இடுக்கி மாவட்டத்தில் இதன் அறிகுறி தென்பட்டுள்ளதால் தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் வெளவால்களின் தாக்கம் இருப்பதாலும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி பழங்களையும், காய்களையும் நன்கு கழுவியபிறகே சாப்பிட வேண்டும். மேலும் பழத்தின் மேற்பகுதியில் சிறிய ஓட்டைகள், துளைகள் போன்ற மாறுபாடு இருந்தால் அவற்றை உண்பதைத்தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் விவசாய, தோட்டக்கலைத்துறை சார்பில் வெளவால்கள் தோப்புகளுக்கு வருவதைத் தடுக்க பட்டாசு வெடித்தல், வலை அமைத்தல் உள்ளிட்டவற்றை அதிகளவில் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ள இடுக்கி தேனி மாவட்ட எல்லை என்பதுடன், வெளவால்களினால் பழங்கள் சேதப்படுத்தப்படுவதும் தேனி பகுதியில் அதிகம் என்பதால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.