நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பிறகு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாகப் பதவியேற்றனர். நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாகப் பதவி ஏற்றனர்.
தமிழக எம்.பி.க்கள் தொகுதி வரிசை வாரியாக இன்று தமிழில் பதவியேற்றனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறி அவர் பதவியேற்றார். இதுபோலவே வட சென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து தமிழக எம்.பி. தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார்.
தொடர்ந்து டி.ஆர், பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பதவியேற்றனர். விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வெல்க எனக் கூறி பதவியேற்றார். தொடர்ந்து பல்வேறு தொகுதி எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றனர்.
சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல்.திருமாவளவன் ‘அம்பேத்கர், பெரியார்’ வாழ்க, வாழ்க ஜனநாயகம்’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதுபோலவே திமுக எம்.பி கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க'' என்று தெரிவித்துள்ளார்.