பைக் ஓட்டிச் செல்லும் போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மீறினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
பைக் ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து பயணிப் பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை கட்டுப்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த உத்த ரவை பல வாகன ஓட்டிகள் பின் பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில், ஹெல்மெட் அணியாதவர்கள் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது, ஏன் வாகனத்தை பறி முதல் செய்யக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த காவல்துறைக்கு அறிவுரையும் வழங்கியது.
இந்நிலையில், போலீஸார் சிலர் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் மட்டும் அல்ல போலீஸாரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மீறும் போலீஸார் மீது வழக்குப் பதியப்படும். தேவைப்படும் பட்சத்தில் குற்றத்தின் தன்மை யைப் பொருத்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.