தமிழகம்

என் மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை: எம்.பி.ரவீந்திரநாத் குமார்

செய்திப்பிரிவு

என் மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனியிலிருந்து ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட அரசியலில் அறிமுக நாயகனான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை.

தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார்.  76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

ரவீந்திரநாத் வெற்றி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நேற்றுகூட, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவிட்ட பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை, தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை என்று  ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பதில் தான் தனது எண்ணம் முழுவதுமாக உள்ளது.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் என்னை தேனி தொகுதியில் அதிக அளவு வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

போடி-மதுரை அகலரயில்பாதை திட்டம் நிறைவேற்றுவதில் எதற்காக தாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இது குறித்து வலியுறுத்துவேன்.  இந்த ரயில்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

எனக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். அவர் அப்படி வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து தேனி வந்த அவர் போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகி உள்ள மாணவி உதயகீர்த்திகா மற்றும் அவரது பெற்றோரை சந்தித்தார்.

மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் அவரது ஆய்விற்கு உதவியாக ரூ.3லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

உடன் நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடைராமர், மாவட்ட அணி செயலாளர்கள் முருகேசன், பாலசந்தர் உட்பட பலர் இருந்தனர்.

SCROLL FOR NEXT