தமிழகம்

37 எம்.பி.க்களும் பெங்களூரு சென்று பேசி, காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

திமுக மற்றும் காங்கிரஸின் 37 எம்.பி.க்களும் பெங்களூரு சென்று பேசி, காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும் என்று  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காவிரி நீரை கர்நாடகா தரவேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையெனில் இங்குள்ள 37 எம்.பி.க்களும் இங்கிருந்து புறப்பட்டு பெங்களூருக்குச் செல்லவேண்டும். அவர்களுடைய கூட்டணிக் கட்சியின் அரசு நடந்துகொண்டிருக்கிறது. அவர்களிடம் பேசி, அணையைத் திறந்து அவர்கள் தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, கர்நாடக அரசு வழங்கும் தண்ணீரைப் பெற்றுத் தரும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. அரசு என்ன செய்யவேண்டுமோ அதைக் கட்டாயமாகச் செய்யும்.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரனுக்குத் தலைமை யார், தலைமையே இல்லாத ஒரு கட்சி. யாருடைய தயவிலோ ஓரிடத்தைப் பெற்ற காரணத்தால், இன்றைக்கு எதுவேண்டுமானாலும் பேசுவார்களா? அதிமுகவின் ஒற்றைத் தலைவர் அமித் ஷாதான் என்று ஈஸ்வரன் கூறிய கருத்தைத் திரும்பப் பெறவேண்டும்.

அவர் பாஜகவோடு கூட்டணியில் இருந்தவர். இதுபோன்ற விஷயங்களைப் பேசும்போது, கொஞ்சம் நாகரிகமாகப் பேச வேண்டும்'' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

SCROLL FOR NEXT